மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி
போர்ட் எலிசபெத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 92 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாஸ் ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் டெண்டுல்கர் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயசூர்யா, டெண்டுல்கர் களம் இறங்கினர். இருவரது ஆட்டத்திலும் அனல் பறந்தது. எதிரணி பந்து வீச்சை இருவரும் விளாசி தள்ளினார்கள். இதனால் ரன் விகிதம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.5.5 ஓவர்களில் 50 ரன்னை தொட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 8.4 ஓவர்களில் 100 ரன்னை எட்டியது. டெண்டுல்கர் 34 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 127 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. டெண்டுல்கர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.டெண்டுல்கர் களத்தில் இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்னுக்கு மேல் குவித்து சாதனை படைக்கும் என்ற நிலையில் இருந்தது ஆனால் அதன் பிறகு மும்பை அணி ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து வந்த ஹர்பஜன்சிங் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் ஜெயசூர்யா 32 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் சுக்லா பந்துவீச்சில் அரிந்தம் கோஷிடம் கேட்ச் கொடுத்து பெலிவியன் திரும்பினார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. டுமினி 18 ரன்னுடனும், திவாரி 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். அபிஷேக் நாயர் 3 ரன்னிலும், பிராவோ 3 ரன்னிலும், ஷிகர் தவான் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுக்லா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, பிராட் ஹாட்ஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.பின்னர் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 15.2 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 95 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கொல்கத்தா அணியில் கேப்டன் மெக்கல்லம் 1 ரன்னிலும், கெய்ல் 12 ரன்னிலும், ஹாட்ஜ் 24 ரன்னிலும், கங்குலி 34 ரன்னிலும், அரிந்தன் ஜோஷ் ரன் எதுவும் எடுக்காமலும், யஷ்பால்சிங் 8 ரன்னிலும், சுக்லா 6 ரன்னிலும், மென்டிஸ், திண்டா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபிஷேக் நாயர், மலிங்கா தலா 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும், ஜாகீர்கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் டெண்டுல்கருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.இந்த போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்தித்த 3-வது தோல்வியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக