புதன், 24 பிப்ரவரி, 2010

இரட்டை சதம் அடித்து சச்சின் சாதனை






குவாலியர்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், இரட்டை சதமடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி குவாலியரில் இன்று நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சேவக் (9) ஏமாற்றினார். பின்னர் இணைந்த சச்சின், தினேஷ் கார்த்திக் ஜோடி, மளமளவென ரன்கள் குவித்தது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் சேர்த்த போது, கார்த்திக் (79) அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் (36) அதிரடியாக ஆடினார்.
பின்னர் இணைந்த சச்சின், கேப்டன் தோனி ஜோடி இந்திய அணியின் இமாலய ஸ்கோருக்கு வித்திட்டது. அபாரமாக ஆடிய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தோனி (68) அரைசதமடித்து அசத்தினார். இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 401 ரன்கள் குவித்தது. சச்சின் (200), தோனி (68) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பார்னல் 2, மெர்வி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
புதிய சாதனை:
குவாலியர் ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள் எடுத்த, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். முன்னதாக ஜிம்பாப்வேயின் சார்லஸ் கோவன்ட்ரி (194*), பாகிஸ்தானின் சயீத் அன்வர் (194) அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகித்தனர். தவிர, ஒருநாள் அரங்கில் அதிக சதம் (47 சதம்), அதிக ரன்கள் (17598 ரன்) எடுத்த வீரர்கள் வரிசையில், சச்சின் முதலிடத்தில் நீடிக்கிறார்.

நன்றி . தினமலர்